வேலூர், நவ.26-
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வேலூர் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன், வெல்கம் பவுண்டேஷன் மற்றும் காலச்சக்கரம் நாளிதழ் சார்பில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.
அண்மையில் வீசிய கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மின்சாரம், குடிநீர், உணவு, தங்குமிடம், உடைகள் இன்றி இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். பெரியவர்களுடன் குழந்தைகளும் பாதிப்புக்கு உள்ளாயினர். பல தாழ்வான பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டது.
இதனால் வீடிழந்து பலர் நடுவீதியில் நிற்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதை கவனத்தில் கொண்டு நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவரும், வெல்கம் பவுண்டேஷன் நிறுவனரும், காலச்சக்கரம் நாளிதழ் நிர்வாக இயக்குநருமான கா.குமார் சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை கொண்டு சென்று நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி சுனாமி குடியிருப்பு பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து அரிசி மூட்டைகள், போர்வை, குடிநீர், ரொட்டி, பிஸ்கெட் உள்ளிட்ட பொருட்களை விநியோகம் செய்தார்.
அந்த அத்தியாவசிய பொருட்களை வேளாங்கண்ணி சுனாமி குடியிப்பு வாசிகள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய துணைத்லைவர் கலிமுல்லா, இணைச் செயலாளர் வாசுதேவன், தமிழ் மாநில தலைவர் ரமேஷ் ஆனந்தராஜ், மாநில செயலாளர் பிரேம்குமார், மாநில பொருளாளர் ரமேஷ், தமிழக வடக்கு மண்டல பொருளாளர் கருணாகரன், தமிழக மாநில ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், மாநில இணை ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், மாநில துணை ஒருங்கிணைப்பாளர் ராமன்குமார், என்ஜேயூ சந்தோஷ், பிரகாஷ், அனிஷ் விஷால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் வழியாக நாகப்பட்டினம் சென்றபோது வழியில் சாலையோரம் திரிந்து கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு போர்வை, பிரட், பிஸ்கெட் வழங்கி நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் தேசிய தலைவர் கா.குமார் தனது அன்பையும், மனிதநேயததையும் வெளிப்படுத்தினார். அதேபோன்று ஒரு குழந்தைக்கு பிஸ்கெட் ஊட்டி அன்பையும், பாசத்தையும் பகிர்ந்து கொண்டார்.